
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்ற சூழ்நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழலில் ‘ஆபரேஷ் சிந்தூர்’ என்ற தலைப்பை திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களில் சினிமா தயாரிப்பாளர்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ‘ஆபரேஷ் சிந்தூர்’ தலைப்பில் ஒரு படமெடுப்பதாக இயக்குநர் உத்தம் மகேஷ்வர் என்பவர் சமூக வலைதளத்தில் அறிவித்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ராணுவ உடையில் இருக்கும் ஒரு பெண் ஒரு கையில் துப்பாக்கியுடனும் இன்னொரு கையில் சிந்தூரை(குங்குமம்) நெற்றியில் வைக்கும்படியும் நின்றிருந்தார். இப்படத்தை நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் நிறுவனங்கள் தயாரிப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு போஸ்டர் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் உத்தம் மகேஷ்வர் விமர்சனம் தொடர்பாக மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது இந்திய ஆயுதப் படைகளின் வீர முயற்சியான ஆபரேஷன் சிந்தூரை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை சமீபத்தில் அறிவித்ததற்கு எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். யாருடைய உணர்வுகளை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை. ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, நமது வீரர்களின் தைரியம், தியாகம் மற்றும் வலிமையால் நான் நெகிழ்ச்சியடைந்தேன், மேலும் இந்த சக்திவாய்ந்த கதையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர விரும்பினேன். நான் அறிவித்த நேர சூழல் சிலருக்கு அசௌகரியத்தையோ வலியையோ கொடுத்திருக்கலாம். அதற்காக, நான் மிகவும் வருந்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.