/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/228_23.jpg)
இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படத்தின் கதை காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிக்கின்றன. இருப்பினும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிசாவில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் நடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக்கானது. இதன் மூலம் பிரித்விராஜ் நடிப்பது தெரியவந்துள்ளது. லீக்கான காட்சிகள் தொடர்பாக படக்குழு படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடித்து வருவதாக ஒடிசாவின் துணை முதல்வர் பிரவதி பரிதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னதாக புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மல்காங்கிரியில் நடந்தது. இப்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் மகேஷ் பாபுவின் 29வது படத்தின் படப்பிடிப்பு கோராபுட் பகுதியில் நடக்கிறது.
இது ஒடிசாவில் படப்பிடிப்பிற்காக ஏராளமான இடங்கள் இருப்பதை நிரூபிக்கிறது. இது ஒடிசா சுற்றுலா துறைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். பின்பு இந்த இடம் ஒரு முக்கியமான படப்பிடிப்பு தளமாக மாறும். ஒடிஸாவின் இடங்களை பற்றி நிறையத் தெரிந்துகொள்ள அனைத்து சினிமா துறையினரையும் வரவேற்கிறோம். வருபவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு இருக்கும் எனவும் உங்களுக்கு முழு ஆதரவு அளிப்போம் எனவும் உறுதியளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் நடிகர்களை குறித்து படக்குழுஇன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் துணை முதல்வர் உறுதிசெய்திருப்பது ராஜமௌலியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)