Skip to main content

"நீங்கள் அப்படி செய்தால் நான் சூசைட்தான் பண்ணணும்!" - பிரபல இயக்குனர் வேதனை!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

fdjdfjd

 

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் "நுங்கம்பாக்கம்". தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம், வரும் 24-ஆம் தேதி சினி பிலிக்ஸ் சேனலில் நேரடியாக வெளியாகிறது. அதை முன்னிட்டு சமீபத்தில் படக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது

 

தயாரிப்பாளர் ரவிதேவன் பேசியபோது.... "முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதரிக்கணும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கும். ஆனால் நாம் இந்தப்படத்திற்கு நல்லாதரவு தரணும். நீங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் படியாக வசதி ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தப்படத்தில் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கும். இந்தப்படத்தைப் பெரிதாக வெற்றிபெற வைக்க வேண்டும்" என்றார்.

 

நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் பேசியபோது... "சமுதாயத்தின் முகமூடியைக் கிழிக்கும் பட விழாவிற்கு நாம் அனைவரும் முகமூடி அணிந்து வந்துள்ளோம். பல தடைகளைக் கடந்து வந்துள்ள இப்படைப்பு ஒரு மாபெரும் படைப்பாக இருக்கும்" என்றார்.

 

நடிகர் அஜ்மல் பேசியபோது... "நுங்கம்பாக்கம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடித்தளமாகக் கொண்ட படம். பல தடைகளைத் தாண்டி கொண்டு வந்துள்ளோம். இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு வந்ததிற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படம் மூலமாக பல விஷயங்கள் வெளிவரும். பல உண்மைகள் தெரியும். இப்படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்

 

பாடலாசிரியர் சினேகன் பேசியபோது... "ஏழுமாதம் கழித்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பிரச்சனைகள் எப்ப முடியும். இந்தப்படம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல இங்கு இவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப்படம் வராவிட்டால் அந்த கொலை வழக்கே நமக்கு மறந்து போய்விடும். எதற்காக இந்த இயக்குநர் மீது ஏழு கேஸ் போட்டார்கள் என்றே தெரியவில்லை. இந்தப்படம் பற்றிய செய்தி வெளிவந்தாலே பலருக்குப் பயம் வந்துவிடும். தான் எடுத்த காரியத்தைக் கடைசி வரை முடித்த இயக்குநரை பாராட்ட வேண்டும்.

 

இந்த நீதிமன்றத்தில் கொஞ்சம் ஈரம் இருந்ததால்தான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. இவ்வளவு போராட்டத்தைச் சந்தித்த இயக்குனருக்கு இந்த சினிமாக்காரர்கள் யாரும் ஆதரவாகக் குரல்கொடுக்க முன் வராதது மிகவும் தவறான விஷயம். எதையெதையோ பார்த்தோமே ரூ.49 கொடுத்து இந்தப்படத்தை பார்ப்போம். போராடுபவன் இறைவனின் பிள்ளை. போராட்டம் தோற்பதே இல்லை. இந்தப்படம் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்

 

Ad

 

இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியபோது... "இந்த மேடையில் நிற்க வைத்த ஜெயச்சந்திரன் ஜே அவர்களுக்கு நன்றி. கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக ரமேஷ் குமார் அவர்களுக்கும் நன்றி. நகரி பரத்குமார் அவர்களுக்கும் நன்றி. இரண்டரை வருடப் போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகப்போராட்டத்தைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விஷயங்களை செய்யவே முடியாது.

 

ஒரு ஆபாசப் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப் படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தை வெளியிடக் கூடாது என பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார். அந்தப்பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. இந்தப்படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத் தெருவாகப் போய் எழுதினார். இந்தப்படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு பல விஷயங்கள் இருக்கு.

 

இந்தப்படத்தின் இயக்குநரை கைது செய்யணும் என்று போலீஸ், சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்துகொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படம் செய்தவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள். என் ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னை படத்தில் அதைத் தூக்கு இதைத்தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்து தான் லெட்டர் கிடைத்தது.

 

Nakkheeran

 

அதன்பின் சென்சார் போனேன். அங்கு பெயர் டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாதப் போராட்டம். அது முடிந்ததும் அந்தணர்கள் கேஸ் போட்டார்கள். அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்து படத்தை வெளியிட நினைத்தால் கரோனா வந்துவிட்டது. தற்போது Cineflix என்ற ஓ.டி.டியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம்.

 

தயவுசெய்து ரூ.49 கட்டிப் பார்க்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் சூசைட் தான் பண்ணணும். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகவும் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேகமெடுக்கும் சுவாதி கொலை வழக்கு... கடந்துவந்த பாதை!

Published on 24/11/2021 | Edited on 25/11/2021

 

 Swathi Murder Case investigation

 

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார், சிறையிலேயே இறந்துவிட்டார் என சிறைத்துறை மருத்துவர் கொடுத்த அறிக்கை, ராம்குமார் மரணத்தில் இருக்கும் மர்மங்களை அதிகரித்துள்ளது.

 

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வாதி. இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணியாற்றிவந்தார். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 06.35 மணிக்கு வேலைக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த சுவாதி, ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில், சுவாதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் சுவாதி.

 

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது. இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ராம்குமாரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் கைது செய்யச் சென்றபோது, ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அந்தக் காதலை சுவாதி ஏற்றுக்கொள்ளாததால் அவரை ராம்குமார் கொலை செய்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுவாதி கொலையில் ஆரம்பம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த நிலையில்தான், கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, சிறையில் மின்சார வயரைக் கடித்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், என் மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என ராம்குமாரின் தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

 

dsgsg

 

வழக்கு விசாரணை ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அப்போது, மனித உரிமை ஆணையத்தில் ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போரட் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ராம்குமாரின் மரண வழக்கில் தொடர்புடைய சிறைத் துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு, ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அத்துடன், ராம்குமாரின் மூளை, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வில், ராம்குமார் மின்சாரம் தாக்கிதான் இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இது இந்த வழக்கில், மிகப்பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், நவம்பர் 23/2021 அன்று, மனித உரிமை ஆணையத்தில், ராம்குமார் உடலை போஸ்ட் மார்டம் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறை மருத்துவர் நவீன் ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ராம்குமாரின் உடலில் 4 சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரி கூறியிருந்த நிலையில், காயங்கள் ஏதும் இல்லை. மேல் உதட்டில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்று பிரேதப் பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

 

ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டரா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த சிறை மருத்துவர் நவீன், ராம்குமாருக்கு இதயத்துடிப்பு இல்லாததால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஜி.எச்.க்கு அனுப்பி வைத்ததாக கூறினார். மேலும், ஈ.சி.ஜி எடுத்த பிறகே இறந்ததாக கூறமுடியும் என்பதால், இதயத்துடிப்பு நின்றுவிட்டது எனக் கேள்விக்குறியுடன் சான்று வழங்கியதாகவும் தெரிவித்தார்.  இந்நிலையில், இந்த வழக்கின் மேல்விசாரணை, வருகிற டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராம்குமார் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழக் காத்திருக்கிறது.

 

 

 

Next Story

சுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

சென்னை சாப்வேர் இன்ஜினியர் சுவாதி கொலையில் தொடர்பு என்று கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் மாண்டு போன மீனாட்சிபுரத்தின் ராம்குமாரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

 

18.09.2016ல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் ராம்குமார் சாவில் மர்மம் இருக்கிறது அது தற்கொலையல்ல. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது தந்தையான நெல்லை மாவட்டத்தின் மீனாட்சிபுரம் கிராமத்திலிருக்கும் பரமசிவன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்திருந்தார்.

 

swathi murder

 

புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்கான முகாந்திரமும் இல்லை. மீறல்கள் உள்ளன, என்று கடந்த சில மாதங்களுக்கு முன் சிறைவார்டன்கள், ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டதில் அவருடனிருந்த சக கைதிகள் ஆகியோரின் பேட்டி மற்றும் ஆதாரத்துடன் நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பியது. 

 

swathi murder

 

அதே சமயம் அது தற்கொலையல்ல.கொலை வழக்காக மாற்றி அதற்கான விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று அவர் தந்தை கொடுத்த புகார் நிலுவையிலிருந்தது. இந்த நிலையில், மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு, தாமாக முன் வந்து ராம்குமார் இறப்பு தொடர்பான வழக்கை மீண்டும் விசாணையைத் துவக்கியது. அதற்காக பிப் 15 அன்று ராம்குமாரின் தந்தை பரமசிவன் ஆஐராக வேண்டும் என்று புலனாய்வுப் பிரிவு அவருக்குச் சம்மன் அனுப்பியது.

 

அதன்படி பரமசிவம், நெல்லை வந்த மனித உரிமை ஆணைய புலானாய்வுப் பிரிவின் எஸ்.பி. சத்தியபிரியா, டி.எஸ்.பி. பிரபு, இன்ஸ்பெக்டர் அகிலா ஆகியோர் முன்னிலையில் ஆஐரானார்.

 

அவரிடம் ராம்குமார் மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன என்று எஸ்.பி. சத்ய பிரியா விசாரித்தார். அது சமயம், அவர், சில ஆவணங்களைக் கொடுத்து விட்டு தனது தரப்பு வாக்கு மூலங்களை எஸ்.பி. சத்யா பிரியா குழுவிடம் பதிவு செய்திருக்கிறார்.

 

swathi murder

 

விசாரணை முடிந்து வந்தவரிடம் நாம் பேசியதில், எஸ்.பி.யம்மா என்கிட்ட  விபரமெல்லாம் கேட்டாங்க. நான் பழைய மாதிரியே சில ஆவணங்களைக் குடுத்துட்டு முன்னால சொன்ன எங்க சந்தேகங்களச் சொன்னோம். சுவாதியக் கொன்னது யாரு. உண்மையான குற்றவாளி யாரு, அது தெரியணும். அரசு பொறுப்புல இருந்தவர் , சிறை பாதுகாப்பல இருந்தவர்  எப்படிச் இறந்தார். ஜெயில்ல ஒயரைக் கடிச்சார்னு சொன்னாங்க. ஒருத்தரால அப்படி மின்சார வயரைக் கடிக்க முடியுமா. நடக்குற காரியமா. முதல்ல அவனுக்கு மோஷன் போவுது ஆஸ்பத்திரிக்கி கொண்டு போறோம். வாங்கன்னு தான் சொன்னாங்க. அடுத்த பத்து நிமிஷத்தில் அவம் இறந்திட்டாம்னு சொல்லிட்டாங்க. தற்கொலை இல்ல. கொலை தான். அதன் விசாரிக்கணும்னு இந்த ஆதாரத்த எல்லாம் குடுத்தோம். எஸ்.பியும், நாங்களும் ஜெயில்ல வார்டன், அவனோட இருந்த கைதிகள்னு எல்லார்ட்டயும் விசாரிச்சோம்னு சொன்னவுககிட்ட, நக்கீரன்ல அட்டைல போட்டு ராம்குமார் சாவு. தற்கொலையில்லன்னு, ஜெயில்ல உள்ளவுக கிட்டல்லாம் விசாரிச்சு வந்த நக்கீரன் செய்தி புக் ஜெராக்ஸ் காப்பிய அந்தம்மாட்டக் குடுத்து, இதப் பாருங்க, அதுல கூட தற்கொலையில்லன்னு போட்ருக்கின்னு, நான் ஆவணமா, நக்கீரன், ரெக்கார்டா பதிவு பண்ணிக் குடுத்தத வாங்கிப் பாத்த எஸ்.பி அதப் பதிவு பண்ணிக்கிட்டு, நானும் பாத்தேன்னு சொல்லி ரெக்கார்டா வைச்சுக் கிட்டாக. நாங்க முடிஞ்ச வரைக்கும் நல்லது செய்றோம். நல்ல நடவடிக்கை எடுக்குறோம்னு சொன்னவுக, வெளியில போயி இதப் பெரிசு படுத்தாதீகன்னு சொன்னாக. என்னால முடிஞ்ச வரைக்கும் ஆதாரம், சந்தேகத்தக் குடுத்திருக்கேம். என்ன நடக்கும்னு பாப்போம்யா என்றார் தளர்வான குரலில்.

 

மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக் குழு, நக்கீரன் கட்டுரையை ராம்குமாரின் மர்ம சாவு விஷயத்தில் முக்கிய ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறது.