Skip to main content

என்.டி.ஆர் உருவம் பொறித்த நாணயம் - குடியரசுத் தலைவர் வெளியிட்டு உரை

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

ntr 100 year ceremony  india president released a coin with ntr image

 

தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார். 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி. ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923 - 2023 என அச்சிடப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், மறைந்த என்.டி.ராமராவ் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தியுள்ளார். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்தார். அவர் நடித்த ராமர் மற்றும் கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் மிகவும் உயிரோட்டமாக இருந்தது. 

 

என்.டி.ஆர் தனது நடிப்பின் மூலம் சாமானிய மக்களின் வலியையும் வெளிப்படுத்தினார். ‘மனுசுலந்த ஒக்காதே’ படத்தின் மூலம் சமூக நீதி, சமத்துவம் என்ற செய்தியை பரப்பியவர். அவர் பல மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கினார், அவை இன்றுவரை நினைவில் உள்ளன" என்றார். இந்த நிகழ்ச்சியில் என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா உட்பட என்.டி.ஆரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்வானி இல்லத்திற்கே வந்த ‘பாரத ரத்னா’ விருது!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Advani awarded Bharat Ratna The President who went to his home

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்நிலையில் அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாதாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்வானி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியல் தலைவரான அத்வானி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும், தனித்துவத்துடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். கடந்த 1927 ஆண்டு கராச்சியில் பிறந்த அவர், பிரிவினையின் காரணமாக 1947 இல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். பண்பாட்டு தேசியம் பற்றிய அவரது பார்வையும், அவர் பல தசாப்தங்களாக, நாட்டிற்காக முழுவதும் கடுமையாக உழைத்து, சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்தார்.

Advani awarded Bharat Ratna The President who went to his home

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, விவாதத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் நாடாளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, துணைப் பிரதமராக இருந்தாலும் சரி, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து, கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவருக்கு மரியாதையையும் பாராட்டையும் பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Punjab Governor banwarilal Purohit resigns

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 14 வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.