தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். மதுரையைச் சேர்ந்த இவர் துபாயில் வளர்ந்தவர். உலக அழகி போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். திரைத்துறையில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸ் மற்றும் பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமிக்கவராக இருக்கிறார்.
இந்த நிலையில் நிவேதா பெதுராஜ் தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார். ரஜித் இப்ரான் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இவரது காதலர், துபாயை சேர்ந்த தொழிலதிபர் எனக் கூறப்படுகிறது. நிவேதா பெத்துராஜும் துபாயில் இருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நிவேதா பெதுராஜ், காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த காதல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதனால் அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரின் பதிவிற்கு கீழ் வாழ்த்துகளை கமெண்ட் செக்ஷனில் பொழிந்து வருகின்றனர்.