“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.

actor vijay actor vijay sethupathi Maharaja Nithilan Saminathan
இதையும் படியுங்கள்
Subscribe