'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நிமிஷா சஜயன். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் ஜானரில் ஃபேமிலி டிராமா உருவாகிறது. திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர் சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இதுவரை செய்யாத வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதாபாத்திரமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் உறுதிப்படுத்துகின்றனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த ஷெட்யூல் கோகுலம் ஸ்டுடியோவில் 8 நாட்கள் படமாக்கப்படும். அதைத் தொடர்ந்து, 12 நாட்கள் சென்னை மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும்.