Advertisment

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்.ஜி.கே. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்துடன் போட்டிபோடும் என்று தொடக்கத்தில் சொல்லப்பட்டது. சூர்யா ரசிகர்களும் இதற்காக ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த படம் ஷூட்டிங்கின்போது இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல்போக, படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. சூர்யாவின் கால்ஷீட்டும் முடிந்ததால், ஒப்பந்தம் செய்யப்பட்ட அடுத்த படத்திற்காக சென்றுவிட்டார். இதன்பின்னர் மீண்டும் என்.ஜி.கேவின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பொறுமையை இழந்த சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்.ஜி.கே திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் இயக்குனர் செல்வராகவனிடம் தினசரி படத்தின் அப்டேட் எதாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளனர். சமீபத்தில்தான் சூர்யாவின் கண்ணில் வில்லத்தனம் இருப்பது போன்று ஒரு போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்தும் ரசிகர்களின் அன்புதொல்லைகளால் இயக்குனரும், தயாரிப்பாளரும் அவதிப்பட்டதால் செல்வராகவன் அவர்களை பொறுமையாக இருக்கும்படி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாகவும் கடுமையாகவும் உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். 3 நாளுக்கு ஒரு முறை அல்லது வாரா வாரமோ வராது. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் என்.ஜி.கே படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment