anirudh

Advertisment

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வெளியான படம் '3'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் அனிருத். அப்படத்தில் இடம் பெற்றிருந்த 'கொல வெறி' பாடலுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. விஜய்யின் 'கத்தி', அஜித்தின் 'வேதாளம்' படத்திற்கு, அட்டகாசமாக இசையமைத்த அனிருத், அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கான இசையமைப்பாளராக மாறிப்போன அனிருத், இசை மட்டுமின்றி பாடகராவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அனிருத்தின் இசையில் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ள படங்களின் நீண்ட பட்டியலே இதற்கு உதாரணம்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு, இசை அனிருத். இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல்களுமே, மெகா ஹிட் ரகம். இந்தப் படத்தை, பொங்கலுக்குத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகிவரும் படம் 'டாக்டர்'. இப்படத்தில், அனிருத் இசையமைத்துப் பாடியிருந்த 'செல்லமா' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அப்பாடல், யூ-டியூப் தளத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்ற பாடல், என்ற சாதனையை இன்று படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் -2' படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்த இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்திலும் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் அடுத்த படமான 'தளபதி 65' படத்திலும் இசையமைப்பாளராக அனிருத்ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள 'விக்ரம் 60' படமும் இப்பட்டியலில் உள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியான தனுஷ்-அனிருத் கூட்டணி நீண்ட வருடங்களுக்குப் பின், ஜவகர் மித்ரன் இயக்கி, தனுஷ் நடிக்க உள்ள 'தனுஷ் 44' படத்தில் இணையவுள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு அனிருத் இசையில் எட்டுப் படங்கள் வெளியாகவுள்ளன. இதைத் தவிர, அனிருத்தின்குரலில் வெளியான சமீபத்திய பாடல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அவரைத் தங்கள் படத்தில் பாட வைக்க தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறுகின்றனர்,நமக்குநெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

அந்த வகையில், இசையமைப்பாளர், பாடகர் எனத் தமிழ் சினிமாவின் அடுத்த ஆண்டினைதன்வசப்படுத்தத் தயாராகிவிட்டாரோ அனிருத்?