
தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உக்ரைன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷாப்கா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் 'பிரின்ஸ்' படக்குழுவினர் நேற்று (17/10/2022) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய, சினிமா ஃபைனான்சியரும், கோபுரம் ஃபிலிம்ஸின் தலைவருமான அன்புச்செழியன் "பிரின்ஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனத்தின் மூலமாக வெளியிடுவதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஏறக்குறைய, 650 ஸ்கிரீன்களில் இபபடத்தை வெளியிடவிருக்கிறோம். வழக்கமாக, சிவகார்த்திகேயன் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல், இந்தப் படமும் வெற்றி பெறும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள்.
முதலில் எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்தபடியாக ரஜினி சார், விஜய் சார் உள்ளனர். இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் இடம் பெற்று அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஹீரோவாக இருப்பதும், படத்தை வெளியிடுவதும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது. அனைத்து குழந்தைகளும் சந்தோஷமாகப் பார்த்துச் செல்லும் ஒரு படமாக இப்படம் அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.