
இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் தயாரித்து, புதுமுக இயக்குனர் ராம்காந்த் இயக்கியுள்ள படம் 'கோகோ மாக்கோ'. காதல், நகைச்சுவை மற்றும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் எழுத்து, இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார் இயக்குனர் ராம்காந்த். இதில் நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க, இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பட வெளியீடு குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி 'கோகோ மாக்கோ' படத்தை விநியோகஸ்தர்களோ, திரையரங்கு உரிமையாளர்களோ வாங்க முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில் டிக்கெட்டுகளை முன்பதவு செய்யலாம். பிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும். அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100ரூ திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடக்கது.