/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/889ef089-1537-41e1-8dc0-5269ca45a3bb.jpg)
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பணிகள், இணைய தளத்துடன் (www.TFAPA.com) தொடங்கியுள்ளது. மூத்த இயக்குனரும், தயாரிப்பாளருமான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா முயற்சியில் “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்" தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 3, 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த அமைப்புக்கு www.TFAPA.com எனும் பெயரில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு, அது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தளத்தில் 1931 முதல் இன்று வரை வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களின் பெயர்கள், அதன் தயாரிப்பாளர்கள், நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் படம் பற்றி இதர தகவல்களும் இடம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தங்களின் திரைப்படத்திற்கு தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள், இந்த இணைய தளம் மூலம் நேரிடையாக பதிவு செய்யும் வசதியை வெகு விரைவில் செய்ய இந்த புதிய சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த அமைப்பு மீண்டும் படப்பிடிப்புகளை தொடங்க, நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததன் பலனாக படப்பிடிப்பு நடத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை பின்பற்றி தமிழக அரசும் வெகு விரைவில் நின்று போயிருக்கும் பல படங்களின் ஷூட்டிங் தொடங்குவதற்கான அனுமதியை விரைவில் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சங்கம் உள்ளது. கரோனாவால் தடைபட்டுபோன படப்பிடிப்புகளை மீண்டும் நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் என பிற உதவிகளையும் "தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்" மேற்கொள்ள இருக்கிறது. திரையரங்குகளில் டிக்கட் விற்பனையில் வசூலிக்கப்படும் 8% உள்ளூர் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட்டுள்ளனர். வெகு விரைவில் அது நீக்கப்பட்டு, ஒரு நல்ல தீர்வு தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கிய பின் இதுவரை 100 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவற்றில் 50 பேர் வாக்குரிமை உள்ளவர்களும் மேலும் அசோசியேட், புரபஷனல் தகுதி அடிப்படையில் 50 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 45 ஆண்டுகளாக வெற்றிகரமான படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களும் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்றைய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அலுவலகம் தயாராகி வருகிறது. இந்த அலுவலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமையில் இயங்க உள்ளது. இதுவரை சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ள முதன்மை உறுப்பினர்கள் 50 பேர் சங்கத்துகான புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் எனவும், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை www.tfapa.com இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் நடப்புகளையும், சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றியும், இந்த இணைய தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். சங்கத்தின் செயல்பாடுகளை இன்னும் கூடுதலாக்க, ஆக்கபூர்வமாக செயல்பட, உங்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் அன்றாட செயல்பாடுகளை அறிந்து கொள்ள Twitter: @TFAPATN, Facebook: TFAPA, தொடர்புக்கு:[email protected] ஆகியவைகளை பின்தொடரலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)