Advertisment

தமிழகத்தில் புதிய படங்கள் வருமா வராதா?

theatre

தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றன. இந்த கட்டணங்கள் அதிகம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.டிஜிட்டல் சேவை அமைப்புகள் குறிப்பிட்ட தொகையை குறைக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதனால் திரையுலக பணிகள் முடங்கி திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. பல திரையரங்குகளில் கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு இதுவரை ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் பட அதிபர்கள் சங்கம் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து விரைவில் புதிய படங்களை திரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை எடுக்க சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. திரையரங்குகளுக்கு அரசு 8 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்றும், திரையரங்குகளுக்கான லைசென்ஸ் தற்போது வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. அதனை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளவும், திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை குறைத்துக்கொள்ளவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. அதேபோல் திரையரங்கு பராமரிப்புக்கு குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களுக்கு 1 ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களுக்கு 50 காசும் வழங்கப்படுகிறது. இந்த பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களுக்கு 5 ரூபாயாகவும், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களுக்கு 3 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

Advertisment

பட அதிபர்கள் சங்கம் இந்த கோரிக்கைகளை ஏற்கனவே அரசிடம் தெரிவித்து அதற்கு அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், இதுவரை அரசாணை ஏதும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி வருகிற 16ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

tamilcinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe