New parties should not be criticized said kamal regards vijay tvk question

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோட் செய்யும் பணிகளில் கடந்த சில வாரங்களாக படு பிஸியாக இருக்கின்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின. மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்கமுடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை. காவல் துறையில் புகார் கொடுப்பது, தக் லைஃப் படத்தை தடை செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும் படத்தை புரொமோட் செய்வதில் கமல் தீவிரமாக இருக்கிறார். அந்த வகையில் மலேசியா, துபாய் செல்ல திட்டமிட்டு அங்கு செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். தக் லைஃப் படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “நல்லாருக்கும் என்ற நம்பிக்கையில் தான் உங்ககிட்ட விடுறோம். மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். அதற்கான எல்லா ஆதாரங்களும் எங்ககிட்ட இருக்கு” என்றார்.

Advertisment

மாநிலங்களவை உறுப்பினர் தொடர்பான கேள்விக்கு, “நம்ம குரல் அங்கே ஒலிக்க வேண்டும். மையத்தின் குரலும் ஒலிக்க வேண்டும். அது ஒரு பாரபட்சமான தமிழர்களுக்கான குரலாக இருக்க வேண்டும்” என்றார். விஜய் கட்சி தொடர்பான கேள்விக்கு, “புதிய கட்சிகளை விமர்சிக்கக்கூடாது” என பதிலளித்தார். கமல் மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.