
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நாவல் ‘தி க்ரே மேன்’. இந்த நாவலை மார்க் க்ரேனி என்பவர் எழுதியிருந்தார். அந்த ஆண்டின் அதிகம் விற்கப்பட்ட இந்த நாவலை படமாக எடுக்க பலரும் முயற்சி செய்தனர். ஆனால், அவை யாவும் செயல்படவில்லை.
தற்போது இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரிலேயே ஒரு மெகா பட்ஜெட் படத்தைத் தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தை இயக்கும் பொறுப்பு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்தை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டன் அமெரிக்காவாக நடித்து புகழ்பெற்ற க்றிஸ் எவான்ஸ், ரயான் கோஸ்லிங் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.1,300 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ருஸ்ஸோ சகோதரர்களில் ஒருவரான ஆண்டனி ருஸ்ஸோ கூறுகையில், “சி.ஐ.ஏ.-வின் வேறுபட்ட முகத்தைப் பிரதிபலிக்கும் இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் போட்டியே இப்படம். கேப்டன் அமெரிக்காவின் ரசிகர்களை இப்படம் ஒரு புதிய உலகத்துக்குள் கொண்டு செல்லும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்துக்கு நெட்ஃப்ளிக்ஸ் மட்டுமே சரியான இடமாக இருக்கும் என்று தோன்றுகிறது.” என்று தெரிவித்தார்.