இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார்.
இதையடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டது. மேலும் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என தெரிவித்தது. பின்பு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் விரைவில் திருமண வீடியோ வெளியாகும் என தெரிவித்து ஒரு புரோமோவை வெளியிட்டது. ஆனால் அதற்குப் பின்பு திருமண வீடியோவும் வெளியாகாமல் அது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ குறித்த ரிலீஸ் அப்டேட்டை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அதில் நயன்தாரா மட்டும் இடம் பெற்றுள்ளார். இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.