/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/00_41.jpg)
நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி எனத் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி இன்று முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். இவரது படங்களில் வரும் டார்க் காமெடி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படம் நெல்சனின் முதல் படமாக வெளிவந்த நிலையில் அதற்கு முன்னதாக 2010ஆம் ஆண்டு சிம்பு, ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கிவந்தார். அப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றும் அப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருந்த நிலையில் அப்படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பேச்சு வார்த்தை பணிகளில் தற்போது நெல்சன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெல்சன் ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக அண்மையில் அறிவித்தார். மேலும் இந்நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனத்தெரிவித்திருந்ததையடுத்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கவின் நடிக்கும் புதிய படத்தை இந்நிறுவனம் சார்பில் நெல்சன் தயாரித்து வழங்குகிறார். இப்படத்தை சிவபாலன் முத்துகுமார் என்பவர் இயக்க ‘பிளடி பகர்’ எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் என்பவர் இசையமைக்கிறார். பட அறிவிப்பை வழக்கமான நெல்சன் பட ஸ்டைலில் புரோமோ வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு கவினின் கதாபாத்திர லுக்கும் அந்த புரொமோ வீடியோவில் இடம்பெறுகிறது. படத்தின் தலைப்பிற்கேற்ப யாசகம் பெறுபவர் லுக்கில் கவின் இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)