
பீகார் பட்னாவை சேர்ந்தவர் பிரபல நடிகை நீது சந்திரா. தமிழில் ‘யாவரும் நலம்’ படம் மூலம் அறிமுகமாகி ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதி பகவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சேட்டை, சிங்கம் 3 ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த நிலையில் இவர் பிரபல ராப் பாடகரான யோ யோ ஹானி சிங்கிற்கு எதிராக பட்னா உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ராப்பர் ஹானி சிங் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘மனியாக்’(Maniac) பாடலில் பெண்களை ஆபாச பொருளாகக் காட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த பாடலை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கொடுத்த மனுவில், “இந்தப் பாடலில் பாலியல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கிறது. போஜ்புரி மொழியில் ஆபாசத்தை சகஜமாக்குகிறது. பெண்கள் மேம்படுத்துதலைத் தடுக்கிறது. பாடல் வரிகளை மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.