நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். 

Advertisment

பின்பு 2018ஆம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாளப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் 2022ஆம் ஆண்டு தெலுங்கில் 'அடடே சுந்தரா' மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஒராண்டுக்கு மேல் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் சூக்சுமதர்ஷினி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து அவர் நடிக்கும் புதிய படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இதனிடையே தமிழில் அவர் ஒரு வெப் தொடர் நடித்து வருவதாகவும் பின்பு சமீபத்தில் சூர்யாவுடன் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் நடிக்கும் வெப் தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘டி ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் சூர்யபிரதாப் இயக்கத்தில் ‘தி மெட்ராஸ் மிஸ்ட்ரி - ஃபால் ஆஃப் ஏ சூப்பர்ஸ்டார்’(The Madras Mystery – Fall of a Superstar) எனும் தலைப்பில் உருவாகும் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரைத் தவிர்த்து நட்டி என்கிற நடராஜ், சாந்தனு பாக்கியராஜ், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் இத்தொடருக்கு ஷோ ரன்னராக இருக்கிறார். இத்தொடரின் கதை இந்தியாவையே உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1940ஆம் ஆண்டு காலகட்டத்தில் அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜ பாகவதர் மற்றும் பல்வேறு திரை பிரபலங்களின் அந்தரங்கம் குறித்து பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் தொடர்ச்சியாக அவரது பத்திரிக்கையில் எழுதி வந்தார். இது பெரும் சர்சசையாக மாறி மர்ம நபர்களால் குத்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட சிலர் கைதாகி சிறைக்கு சென்றனர். பின்பு தியாகராஜ பாகவதர் வெளியில் வந்தும் திரைத்துறையில் ஜெயிக்க முடியாமல் சரிந்து போனார். இந்த சம்பவத்தை மையப்படுத்தி இத்தொடர் உருவாகிறது. இத்தொடர் மூலம் நஸ்ரியா மீண்டும் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கிறார். இந்தாண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியகவுள்ளது. இத்தளம் தங்களது 2025 புராஜெக்டுகளை ஒரு டீசர் மூலம் அறிவித்துள்ளது. அதில் தான் இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நஸ்ரியாவின் லுக்கும் அதில் இடம் பெற்றுள்ளது.

Advertisment