
நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். பின்பு 2018ஆம் ஆண்டு கூடே என்ற மலையாளப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் 2022ஆம் ஆண்டு தெலுங்கில் 'அடடே சுந்தரா' மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஒராண்டுக்கு மேல் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் சூக்சுமதர்ஷினி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து நஸ்ரியா குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நஸ்ரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் என்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் எப்போதும் ஆக்டிவாக இயங்கி வந்தேன். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, எமோஷ்னலாகவும் தனிப்பட்ட சவால்களினாலும் போராடி வருகிறேன். அதனால் ரொம்ப கடினமாகிவிட்டது. எனது 30வது பிறந்தநாள், புத்தாண்டு, சூக்சுமதர்ஷினி பட வெற்றி விழா... இது போன்று பல முக்கியமான தருணங்களைக் கொண்டாட தவறிவிட்டேன்.
நான் ஏன் ஆக்டிவாக இல்லாமல் போனேன் என்பதை விளக்காததற்கும், அழைப்புகளை எடுக்காததற்கும் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்காததற்கும் எனது அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய கவலை அல்லது சிரமத்திற்கு வருந்துகிறேன். ஒரு நல்ல விஷயமாக, நேற்று சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதைப் பெற்றதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! அனைத்து அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி. முழுமையாகத் திரும்பி வர எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம், ஆனால் நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.