Anjali

Advertisment

மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'நாயட்டு' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. கேரளா மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய ரசிகர்களிடமும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து, 'நாயட்டு' படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவியது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், 'நாயட்டு' படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் வேகமெடுத்துள்ளன. தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ள கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குஞ்சக்கோ போபன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்ய தேவ்வையும், ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் நடிக்க ராவ் ரமேஷையும் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களை இறுதிசெய்த பின், இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.