'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.
முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா முதல் அலை காரணமாக தடைபட்டது. பின், நிலைமை சீரானதும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தது. விரைவில் படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் நோக்கோடு இறுதிக்கட்டப் பணிகளையும் படக்குழு முடுக்கிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த நயன்தாராவிற்கு படம் மிகவும் பிடித்திருந்ததாகவும், இதையடுத்து, இயக்குநர் மிலிந்த் ராவிற்கு பாராட்டுதெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், அப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டும்பட்சத்தில், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரத்தினர்.