சினிமாவில் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு டிரெண்டில் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுவாரசியம் நிறைந்த யதார்த்த படங்கள்,உணர்வுப்பூர்வமான காதல் படங்கள்,தரமானகமர்சியல் பொழுதுபோக்குப்படங்கள், மிகச்சிறந்தகாமெடி படங்கள், மிரள வைக்கும்ஹாரர் படங்கள் ஆகியவை இந்த டிரெண்டையும் தாண்டி வெற்றி பெறுவது உண்டு. இதில் குறிப்பாக ஹாரர் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனாலேயே தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் அவரவர் கரியரில் சில ஹாரர் படங்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். இவைவசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றி பெற்று அவர்களை எளிதில் உச்சம் அடையச்செய்கிறது. நயன்தாராவுக்கு 'மாயா' ஒரு நல்ல வெற்றியைக்கொடுத்தது. அதன் பிறகு 'டோரா', இப்போது 'ஐரா' என அவ்வப்போது ஹாரர் பக்கம் போய்வருகிறார் நயன்தாரா. 'ஐரா', 'மாயா' போலவா அல்லது 'டோரா' போலவா?

airaa nayanthara

Advertisment

தனக்கு நடக்கும் கல்யாண ஏற்பாடு பிடிக்காமல் தன் வீட்டை விட்டு கிராமத்தில் இருக்கும் தன் பாட்டி வீட்டிற்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா. அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு பேய், நயன்தாரா மற்றும் அவரது பாட்டியை துன்புறுத்துகிறது. அதே நேரம் நகரத்திலும் இந்தப் பேயால் பலர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதையெல்லாம் கவனித்து வரும் கலையரசன் இந்தக்கொலைகளுக்கு தன் காதலிதான் காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார். மேலும் தன் காதலியின் அடுத்த டார்கெட் நயன்தாரா என்பதையும் கண்டுபிடிக்கிறார். இதனால் அதிர்ந்து போன கலையரசன், நயன்தாராவை காப்பாற்ற முயல்கிறார். பிறகு அந்த முயற்சி என்னவானது... நயன்தாராவிற்கும் அந்தப்பேய்க்கும் என்ன சம்பந்தம்... மர்மமான முறையில் இறந்தவர்கள் யார்... கலையரசனின் காதலி எப்படி இறந்தார்... அவர் ஏன் நயன்தாராவை கொல்லத் துடிக்கிறார் என்பதே 'ஐரா' படத்தின் கதை.

nayanthara black

Advertisment

பேய், திகில்படங்களுக்கே உரித்தான பெரிய பங்களா வீடு, கரண்ட் கட், ஜோவென்று பெய்யும் மழை, இதில் ஆங்காங்கே தெரியும் பயமுறுத்தும் நிழல்கள், ஆங்காங்கே ஜெர்க் உண்டாக்கிபயமுறுத்தும் பேய், பயமுறுத்தும் மந்திரவாதி, கருப்பு உருவம் என தொன்று தொட்டு பார்த்துப் பழகிய டெம்ப்லேட்டிலேயே திரைக்கதை அமைத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சர்ஜூன். முதல் பாதி முழுவதும் பயமுறுத்துவதிலேயே கடந்துவிடுகிறது. இரண்டாம் பாதிக்குநடுவில்தான் கதை ஆரம்பித்து அதன் பிறகுதிரைக்கதை அழுத்தம் அடைந்துபடத்தைத்தூக்கி நிறுத்த முயற்சி செய்துள்ளது. இதில் ஆங்காங்கே தென்படும் சில புதுமையான காட்சிகள் அயர்ச்சியை தவிர்க்கின்றன. குறிப்பாக படம் முழுவதும் வரும் பட்டாம் பூச்சி் போர்ஷன் சிறப்பு. புதிதாக எதுவுமே இல்லாத கதைக்களமும் வழக்கமான திரைக்கதையும் எந்த பெரிய அனுபவத்தையும் கொடுக்கவில்லை.

kalaiarasan

படத்தில் வரும் வழக்கமான தோற்றத்திலுள்ள பாத்திரத்தைக்காட்டிலும் கருப்பு நயன்தாரா பாத்திரத்தில் நயனின்நடிப்பு மிளிர்கிறது. அவர் காட்டும் மெல்லிய சோகம் கலங்க வைக்கிறது.தனி ஆளாக படம் முழுவதையும் தாங்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். யோகிபாபு சிறிது நேரமே வந்து கதையோட்டத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளார். ஆனால் அவரிடம் காமெடியை பெரிதாகஎதிர்ப்பார்த்து சென்ற அவரது ரசிகர்களுக்கு இது மட்டும் போதுமா...? படத்திற்கு இன்னொரு தூணாக கலையரசனின் நடிப்பு அமைந்துள்ளது. அமைதியான, தெளிவானஅவரது நடிப்பு பல இடங்களில் நெகிழச் செய்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாதேவன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், குலப் புள்ளி லீலா பாட்டி, கேப்ரில்லா செலஸ், குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமார் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும், மேகதூதம் பாடலும் மனதில் நிற்கின்றன. குறிப்பாக இவரது பின்னணி இசை படம் முழுவதும் பல இடங்களில் நம்மை நெகிழச் செய்து ரசிக்க வைத்துள்ளது. தாமரை எழுதியுள்ள மேகதூதத்தின் வரிகளில் அவரது தனித்தன்மை தெரிகிறது. சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகளும், இரவு நேர காட்சிகளில் வரும் வண்ணங்களும் புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளது.

'ஐரா'வில் நயன்தாரா மட்டுமே ஸ்பெஷல்.