
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமண வாழ்க்கை ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் பேசும் வீடியோ மூன்று வினாடி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ட்ரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மூன்று வினாடி வீடியோவிற்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதனை நயன்தாரா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து, “தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 3 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும். பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன” என குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த செயல் கீழ் தனமானது என்றும் மேடைகளில் பேசுவது போல் உங்களால் நடந்து கொள்ள முடியாது என்றும் தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப, நயன் தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றுள்ளது. ட்ரைலரில் இடம்பெற்ற 3 வினாடி காட்சிக்கு தனுஷ் தரப்பில் இருந்து காப்புரிமை கேட்கப்பட்ட நிலையில் அந்த காட்சிகளை நீக்காமல் தற்போது 20 வினாடிக்கும் மேலாக காட்சிகள் இருப்பது இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.