nayanthara instagram post issue

தமிழில் மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நயன் தாரா, அவர் நடத்தி வரும் '9 ஸ்கின்' நிறுவனம் தொடர்பான விளம்பரங்களை அதிகம் பகிர்ந்து வந்திருந்தார்.

இந்த நிலையில் நயன் தாரா தான் செம்பருத்தி டீ குடித்து வருவதாக தெரிவித்த அவர், தனது ரசிகர்களையும் செம்பருத்தி டீ குடிக்க பரிந்துரைத்திருந்தார். மேலும் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு செம்பருத்தி டீ நல்லது என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவு, தற்போது சர்ச்சையாகியுள்ளது. நயன் தாராவின் பதிவிற்கு, டாக்டர் பிலிப்ஸ் என்ற எக்ஸ் பக்கத்தில், “செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோடு நயன்தாரா நிறுத்தியிருந்தால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதோடு நிற்காமல் செம்பருத்தி டீயின் மருத்துவ குணத்தைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்டவை எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மைகளே.

இந்த பதிவு அவரது ஊட்டச்சத்து நிபுணரை ப்ரோமோட் செய்யும் நோக்கத்திற்காகவே அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதால் ஆண் மற்றும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகை நயன்தாரா ஆயுர்வேத மருத்துவ முறையே வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் என்கிற புரிதலில் பல்வேறு போலியான தகவல்களை பகிர்ந்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், “சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார்” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து நயன்தாரா தனது பதிவை நீக்கினார்.

Advertisment

இந்தச்சூழலில் நயன் தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “முட்டாள்களுடன் ஒருபோதும் வாதிடாதீர்கள், அவர்கள் உங்களை அவர்களின் நிலைக்கு இழுத்துச் செல்வார்கள், பின்னர் உங்களை அனுபவத்தால் தோற்கடிப்பார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.