எல்.கே.ஜி படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி நடித்து இயக்கவுள்ள படம் முக்குத்தி அம்மன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜியை வைத்து எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம்தான் முக்குத்தி அம்மன் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான அட்வான்ஸை எல்.கே.ஜி படம் முடிவடைந்தபோதே கொடுத்துவிட்டதாக பாலாஜி தெரிவித்திருந்தார்.
முக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் எல்.கே.ஜி படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய என்.ஜே. சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இயக்குகின்றனர். கதை மற்றும் திரைக்கதையை தனது நண்பர்களுடன் இணைந்து ஆர்.ஜே. பாலாஜியே எழுதியிருக்கிறாராம். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் முக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு சம்மர் ரிலீஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.