நயன்தாரா கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இப்போது தமிழில் மன்னாங்கட்டி, மூக்குத்தி அம்மன், ராக்காயி மற்றும் கவினுடன் ஒரு படம், மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடன்ஸ்’, ‘பேட்ரியாட்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘மன சங்கர வர பிரசாத் கரு’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமீபகாலமாக நயன்தாரா சரிவை சந்துத்து வருகிறார். அவரது படம் திரையரங்கில் வெளியாகி கடந்த வருடமும் இந்த வருடம் இப்போது வரையும் ஒரு படம் கூட திரையரங்கில் வெளியாகவில்லை. கடைசியாக வெளியான அன்னப்பூரனி படம் ஓடிடியில் வெளியான போது வலது சாரி ஆதரவாளர்கள், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது. பின்பு வெளியான திருமணம் ஆவணப்படமும் நானும் ரௌடி தான் பட காட்சிகள் தொடர்பாக சர்ச்சையில் சிக்கி வெளியான பின்பும் வெற்றிபெறவில்லை. அடுத்து நேரடியாக ஓடிடியில் வெளியான ‘டெஸ்ட்’ படமும் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் நயன்தாராவின் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து உடனடியாக வெளியாகியுள்ளது. நேற்று மாலை ‘மன சங்கர வர பிரசாத் கரு’ படத்தில் சசிரேகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவரது கதாபாத்திர போஸ்டர் வெளியானது. பின்பு இன்று காலை மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து மாலை பேட்ரியாட் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அடுத்ததாக நேற்று வெளியான படத்தின் அடுத்த அப்டேட்டாக ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மீசால பில்லா’ பாடலின் புரொமோ வெளியானது.
இது போக அவர் நடிப்பில் சர்ச்சையில் சிக்கி ஓடிடியில் வெளியான ‘அன்னப்பூரனி’ படம் வேறொரு ஓடிடி தளத்தில் இந்தி வெர்ஷனில் மட்டும் நேற்று வெளியாகியுள்ளது. சமீபகாலமாக தொடர்ந்து சரிவு சர்ச்சை என அமைந்ததால் இப்போது தொடர்ந்து அப்டேட் வெளியாகியிருப்பது நயன்தாராவை குஷிபடுத்தியுள்ளது.