நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப் படத்தை டார்க் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதில் ‘நானும் ரௌடி தான்’ பட காட்சிகள், தன்னுடைய அனுமதி இல்லாமல் இருப்பதாக சொல்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான தனுஷின் உண்டர் பார் நிறுவனம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

Advertisment

இதனிடையே அதே ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி சந்திரமுகி பதிப்புரிமை பெற்றுள்ள ஏ.பி. இன்டர்நேஷனல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்தது. அதில் சந்திரமுகி படக் காட்சிகளை நீக்க கோரியும் ஏற்கனவே ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் படக் காட்சிகளை இன்னமும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கி பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் என்றும் ஆவணப்படம் மூலமாக ஈட்டிய லாபக் கணக்கை தங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த மனுவை விசாரணைக்கு வந்த போது, மனு தொடர்பாக டார்க் ஸ்டூடியோ நிறுவனமும், நெட் பிளிக்ஸ் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபத் செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டார்க் ஸ்டூடியோ தரப்பில் பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக எந்த தகவலும் இல்லை எனவும் வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அக்டோபர் 6ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.