
இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நவாசுதீன் சித்திக். ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஜைனப் என்கிற அலியா மீது நவாசுதீன் தாயார் மெஹ்ருனிசா வெர்சோவா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவரது புகாரைத் தொடர்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அலியா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நவாசுதீன் தாயாருக்கும் மனைவிக்கும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு சிக்கல் வந்துள்ளதை அடுத்து இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் ஐபிசி 452, 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நவாசுதீன் சித்திக்கின் மனைவியிடம் விசாரணை நடத்த உள்ளனர். ஜைனப் என்ற அலியா நவாசுதீனின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. நவாசுதீன் சித்திக் அலியாவை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு அலியா விவாகரத்து கேட்டு பின்பு அதைத் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.