nawazuddin siddiqui

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'பேட்ட'. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடித்திருந்தார். இவருக்கு, ஆலியா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நவாஸுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கேட்டு ஆலியா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது, பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தன்னுடைய முடிவை ஆலியா தற்போது மறுபரிசீலனை செய்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் ஆலியாவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தார். அந்த நேரத்தில் குழந்தைகளையும் அவரையும் நவாஸுதீன் சித்திக் மிகவும் அன்புடன் கவனித்துக்கொண்டதே ஆலியாவின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணமாம்.

Advertisment

இதுகுறித்து ஆலியா கூறுகையில், "எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டவுடன் நவாஸுதீன் சித்திக்கிடம் தகவல் தெரிவித்தேன். என்னை பரிவுடன் அணுகிய அவர், இரு குழந்தைகளையும் அவருடன் வைத்து கவனித்து வருகிறார். இந்த நெருக்கடியான நேரத்தில் நவாஸுதீன் சித்திக்கின் மறுபக்கத்தை நான் பார்த்தேன். குழந்தைகளின் நலனையும் கருத்தில்கொண்டு, நம் விவகாரத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவரும் அதே யோசனையில் இருந்தார். நாங்கள் இருவரும் இணைந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனக் கூறினார்.