திரைத்துறையில் 20 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர் நடிகை நவ்யா நாயர். மலையாள நடிகையான இவர், மலையாளத்தை தாண்டி தமிழ் மற்றும் கன்னடத்திலும் கவனம் செலுத்தி வந்தார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர சின்னதிரையிலும் ரியாலிட்டு ஷோவில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் இவர் மல்லிகைப்பூ எடுத்து சென்றதுக்காக ரூ.1.14 லட்சம் அபராதம் கட்டவுள்ளார். மலையாளிகளின் புகழ்பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளி சங்கத்தால் ஓணம் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நவ்யா நாயர் விமானம் மூலம் சென்ற நிலையில் ஆஸ்திரேலியாவின், மெல்போர் விமான நிலையத்தில் மல்லிகைப்பூ எடுத்து சென்றதுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத சம்பவத்தை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சொல்லியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் இங்கு வருவதற்கு முன்பு, என் தந்தை எனக்கு மல்லிகைப்பூ வாங்கித் தந்தார். அதை அவர் இரண்டு பகுதியாக வெட்டி ஒன்றை, என் தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். காரணம் கொச்சியிலிருந்து நான் சிங்கப்பூர் செல்வதற்குள் அது வாடிவிடும் என்பதால். இன்னொரு பகுதியை என் கைப்பையில் வைத்திருக்க சொன்னார். அவர் சொன்னபடியே ஒரு பகுதியை என் தலையிலும் இன்னொரு பகுதியை என் பையிலும் வைத்திருந்தேன்.
விமான அதிகாரிகள் என் பையை சோதனை செய்ததில் நான் வைத்திருந்த 15 செ.மீ. மல்லிகைப் பூவிற்காக 1,980 டாலர் அபராதம் விதித்தார்கள். தவறு என்பது தவறு தான். இருந்தாலும் அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை. அதிகாரிகள் அந்த அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த அறிவுறுத்தினார்கள். என் மல்லிகைப்பூ ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புடையது” என சிரித்துக் கொண்டே சொன்னார். ஆஸ்திரேலியாவில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் சுங்கச் சட்டங்களின் கீழ், புதிய பூக்கள் மற்றும் தாவரப் பொருட்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.