2018-ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான 'அந்தாதூண்', சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இந்திப்படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது. இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்தியில் இப்படத்திற்குக்கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடரந்து, படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு அனைத்து மொழி தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டினர். இக்கடும் போட்டிக்கு மத்தியில், அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.
அவரது மகனான பிரசாந்த் நடிக்க உள்ள இப்படத்தை, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குனரான ஜே.ஜே.ஃபிரட்ரிக் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தகவலை, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.