Skip to main content

"சண்டை காட்சியில் சங்கு ஒதுங்கிடுச்சு" -  ‘வெப்’ பட அனுபவம் பகிரும் நட்டி

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Natty Interview

 

'வெப்' படத்தில் நடித்த தன்னுடைய அனுபவங்களை நடிகர் நட்டி நட்ராஜ் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைத்தையுமே முடிவு செய்வது ஸ்கிரிப்ட் தான். அதில் ஒரு அழகான விஷயத்தை இயக்குநர் சொல்லியிருக்கிறார். நாம் செய்யும் விஷயங்களில் எது தேவையோ, அதை இயக்குநர் எடுத்துக்கொள்வார். ஒளிப்பதிவாளராக வேலை செய்துவிட்டு நடிகராக வரும்போது முதல் படத்தில் ஒரு பதட்டம் இருந்தது. இப்போது அது இல்லை. நான் கதை கேட்கும்போது சாதாரண ஒரு மனிதனின் மனநிலையில் இருந்து தான் கேட்பேன். கதையில் என்ன இருக்கிறது என்பது அதிலேயே புரிந்துவிடும். 

 

ஒரு காட்சி எதற்காக இருக்கிறது என்பதை இயக்குநர் தெளிவாக விளக்கிவிடுவதால் நடிக்கும்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சில நோய்களை மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுவை சிகிச்சை நிலைக்கு சென்றுவிட வேண்டாம் என்று சொல்வதுதான் இந்தப் படம். படத்தில் சில வன்முறைக் காட்சிகள் இருப்பதற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு கதைக்களமும் நம்மிடமிருந்து ஒவ்வொரு விஷயத்தை எதிர்பார்க்கும். அதில் இதுவரை என்னுடைய பணியை நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

 

ஓடிடியின் வருகை என்பது காலத்தின் வளர்ச்சி. அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. திரையரங்குகளிலேயே பெரிய ஸ்கிரீன், சிறிய ஸ்கிரீன் என்று காலத்துக்கு ஏற்றவாறு மாறியே வந்திருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் சினிமா மக்களை சென்றடைந்தால் அது எனக்குப் போதும். சினிமாவில் நான் நடிக்கிறேன் என்று சொன்னபோது என்னுடைய நண்பரான இயக்குநர் அனுராக் காஷ்யப் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். நல்ல படங்கள் எது வந்தாலும் அதைப் பார்த்து அவர் பாராட்டுவார். 

 

பேன் இந்தியா படங்கள் இப்போது அதிகம் வருவதால் அனைத்து மொழிகளில் உள்ள நடிகர்களும் மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர். இந்த படத்தின் இயக்குநர் மிகவும் ஜாலியான மனிதர். செட்டை எப்போதும் கலகலப்பாகவே அவர் வைத்திருப்பார். கஷ்டப்பட்டு நடித்துவிட்டு வந்து உட்காரும்போது "நம்ம படத்துக்கு எப்போ நடிப்பீங்க?" என்று கேட்பார். படத்தின் சண்டை காட்சிகளில் எல்லாம் சங்கு ஒதுங்கிடுச்சு, அந்த அளவுக்கு பெண்ட் எடுத்துட்டாங்க. ஒளிப்பதிவாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் நம்முடைய பணியை நாம் சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் வெற்றி. நான் ஒளிப்பதிவாளராக இருக்கும்போதே மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்தது. நடிகரானதும் கூடுதலாக தெரிகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்