காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை மத்திய அரசு சில தினங்களுக்கு முன் ரத்து செய்ததால் கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதற்கிடையே பக்ரீத் காரணமாக இன்று 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, டிவி, ரேடியோ, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஹமீத் என்னும் திரைப்படத்தில் நடித்த சிறுவன் தல்ஹா அர்ஹத் ரேஷிக்கு அறிவிக்கப்பட்டது. நோயால் இறக்கும் தருவாயில் இருக்கும் தன் தந்தையை காப்பாற்ற கடவுளுக்கு போன் செய்து உதவி கேட்கும் ஹமீத் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தல்ஹா அர்ஹத். காஷ்மீர் சிறுவனான அவருக்கு தான் விருது பெற்றுள்ள தகவலே தெரியாது என்று கூறப்படுகிறது. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும், விரைவில் அவரிடம் இந்த செய்தியை தெரிவித்து விடுவோம் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.