
கரோனா நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து லாக்டவுன் அமலில் உள்ளது. அண்மையில்தான் சில தளர்வுகளுடன் லாக்டவுன் செயல்படுகிறது.
இருந்தபோதிலும் சினிமா ஷூட்டிங் மற்றும் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்காமல் தவிர்த்து வருகிறது. கரோனா அச்சுறுத்தல் சீரானவுடன்தான் மீண்டும் பொழுதுபோக்கு துறைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் நடிகையும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் வேர்ல்டு இந்தியா பட்டம் வென்றவருமான நடாஷா சூரி தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஒரு அவசர வேலையின் காரணமாக புனே சென்றேன். பிறகு திரும்பி வந்தபோது, எனக்கு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சோர்வு ஏற்பட்டது.
மூன்று நாட்களுக்கு முன்பு டெஸ்ட் செய்தபோது, எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் வசிக்கும் பாட்டி மற்றும் சகோதரி தற்போது கரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.