சென்னை டி.நகரில் ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் ‘எஃப் 1’ ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்துக் கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அஜித்தின் கார் ரேஸிங் டீமில் அவர் இணைந்தது குறித்தும் அஜித்தின் குறிக்கோள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அஜித்தை எனக்கு 25 ஆண்டுகாலமாக தெரியும். அவருக்கும் ரேஸிங்கில் ஆர்வம் அதிகம். இப்போதைக்கு அவருடைய இலக்கு, இந்திய ரேஸிங் டீமை ஒருங்கிணைக்க வேண்டும் எனபதுதான். இப்போது முதல் படி எடுத்து வைத்திருக்கிறார். அடுத்த படி அடுத்தடுத்து வைப்பார்” என்றார். பின்பு அவரிடம் சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘எஃப் 1’ பட தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கண்டிப்பாக அஜித் பொருத்தமாக இருப்பார். 50 வயதிலும் நிறையப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்” என்றார்.
கடந்த ஜூலையில் பிரான்சில் நடந்த கார் ரேஸ் போட்டியில், இதே ‘எஃப் 1’ பட தொடர்பான கேள்வி அஜித்திடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் சிரித்துக்கொண்டே , “ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மற்றும் எஃப்1 படங்களின் அடுத்த பாகத்தில், நடிக்க வாய்ப்பு வந்தால் மாட்டேன் என சொல்ல மாட்டேன்” என்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.