அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் கார் ரேஸில் ஈடுபடத் தொடங்கினார். இம்முறை முழு மூச்சாக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி, துபாய் ஆரம்பித்து போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். சமீபத்தில் மொட்டை அடித்து தனது கெட்டப்பை மாற்றியிருந்தார். 

இந்த நிலையில் மலேசியாவில் வருகின்ற டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ‘ஆசிய லீ மான்ஸ் தொடர்’ போட்டியில் அஜித்குமார் அணியுடன் இந்தியாவின் முதல் எஃப் 1 ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அஜித்குமார் அணி பங்கேற்கிறது. நரேன் கார்த்திகேயன் இணைந்தது குறித்து அஜித் கூறுகையில், “எங்கள் அணியில் நரேன் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் இணைந்து போட்டியிடுவது ஒரு மரியாதை. மேலும் ஸ்பெஷலானது” என்றார். 

இதையடுத்து நரேன் கார்த்திகேயன் கூறுகையில், “எனக்கு அஜித்தை பல வருடங்களாகத் தெரியும், அவர் இப்போது முழு மூச்சாக கார் ரேஸில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் ஒரு அற்புதமான பயணத்தை எதிர்நோக்குகிறேன்” என்றார். கடந்த ஆண்டு இறுதியில் அஜித் குமார், கார் ரேஸில் மீண்டும் ஈடுபடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் நரேன் கார்த்திகேயன் தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தார். பின்பு அஜித்குமார் அணி தொடங்கியதும் வாழ்த்துக்கள் நண்பா எனக் கூறியிருந்தார். 

Advertisment

நரேன் கார்த்திகேயன், உலகப் புகழ் பெற்ற ‘ஃபார்முலா 1’ கார் பந்தய போட்டிகளில் 2005, 2006, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் கலந்து கொண்டார். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் கார் ரேஸில் 1992முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.