உலகப் புகழ் பெற்ற ‘ஃபார்முலா 1’ கார் பந்தய போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்து கொண்டுள்ள முதல் ரேஸர் என்ற பெயரை பெற்றவர் நரேன் கார்த்திகேயன். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் 2005ஆம் ஆண்டு நடந்த ‘ஃபார்முலா 1’ போடியில் ‘ஜோர்டன் எஃப் 1’ டீம் சார்பில் கலந்து கொண்டு போட்டியிட்டார். பின்பு ஃபார்முலா 1 போட்டியில் புள்ளிகள் பெற்ற முதல் இந்திய ரேஸரானார். அடுத்து 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு போட்டிகளில் போட்டியிட்டார்.
ஃபார்முலா 1 ரேஸில் போட்டியிடுவதற்கு முன்பாக பிரான்சில் உள்ள புகழ்பெற்ற வின்ஃபீல்ட் ரேஸிங் பள்ளியில் பயின்றார். அங்கு 30க்கும் மேற்பட்ட ஃபார்முலா 1 ஓட்டுநர்கள் பயிற்சி பெற்றனர். அதில் ஒரே இந்தியர் மற்றும் வெள்ளை நிறம் அல்லாத மாநிறம் ஆளாக இருந்தார். இதனால் மற்ற மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டையும் அடக்குமுறைகளையும் அவர் எதிர்கொண்டார். ஃபார்முலா 1 தவிர்த்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது பயணத்தை கௌரவிக்குக்கும் வகையில் 2010ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/19/324-2025-07-19-16-24-43.jpg)
இந்த நிலையில் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை பயணம் திரைப்படமாகிறது. இப்படத்தினை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தை தாண்டி எடிட்டராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார். தமிழில் கமலின் விஷ்வரூபம், ஜோதிகாவின் 36 வயதினிலே உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக இருந்தார். பின்பு கமலை வைத்து ஒரு படமெடுக்க கமிட்டானார். ஆனால் அப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இப்போது மலையாளத்தில் மம்மூட்டியையும் மோகன்லாலையும் வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.
நரேன் கார்த்திகேயனின் பயோ- பிக் படத்தை ப்ளூ மார்பில் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரைக்கதையை சூரரைப் போற்று படத்திற்கு சுதா கொங்கராவோடு திரைக்கதை அமைத்த ஷாலினி உஷா தேவி கவனித்து வருகிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நரேன் கார்த்திகேயன், தனது சிறு வயதில் ரேஸிங் போட்டியில் கலந்து கொண்டது முதல் அவரது குடும்பம், திருமணம் மற்றும் உலகளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டது வரை காண்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.