Skip to main content

“மிகச்சிறந்த தமிழ் இயக்குநரோடு இணையவுள்ளேன்” - நானி சஸ்பென்ஸ்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

nani speech at hi nanna movie press meet

 

வைரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடிப்பில், உருவாகியுள்ள படம் 'ஹை நான்னா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது. இதையொட்டி, நானி சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார். 

 

நானி பேசியதாவது, “நான்னா என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை 'நான்னா' என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்” என்றார்.

 

மேலும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி பதிலளிக்கையில், “எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன். ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால், அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற‌ படங்கள் வந்த பிறகு தமிழ் நடிக‌ர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும். 

 

நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும். காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால், அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எதுவும் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள். 

 

முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023ல் கிஸ் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.  நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நானியுடன் மோதும் எஸ்.ஜே. சூர்யா

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

sj surya to play villan role in nani 31 movie

 

தெலுங்கு நடிகரான நானி, தசரா படத்தைத் தொடர்ந்து தனது 30வது படமான 'ஹாய் நான்னா' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, அறிமுக இயக்குநர் சவுரியா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தை முடித்துவிட்டு தன்னை வைத்து ஏற்கனவே இயக்கிய 'அடடே சுந்தரா' பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் நானி. இப்படத்தை ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி. தனய்யா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் 'கேங் லீடர்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நானியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

 

இந்த நிலையில் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே. சூர்யா, நானியுடன் மோத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படம் மூலம் தெலுங்கில் வில்லனாக அறிமுகமானார் எஸ்.ஜே சூர்யா. அதில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணம் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 

 

முன்னணி பிரபலங்கள் பிரியங்கா மோகனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

 

 

Next Story

'மண்ணிலே ஈரமுண்டு...' - சூர்யாவுக்காக மனம் வருந்திய நானி

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

nani feels for jai bhim getting no national award

 

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் ஒரு விருதினைக் கூட வாங்கவில்லை. கடைசி விவசாயி படம் மட்டும் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் வென்றுள்ளது. அதை தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் 'கடைசி விவசாயி' படத்திற்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த கல்வித் திரைப்படம் - 'சிற்பங்களின் சிற்பங்கள்' (லெனின்) தேர்வானது. 

 

இந்நிலையில் இந்த விருதில் தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்காகச் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கு கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டதாகத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

 

ரசிகர்களைத் தாண்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என விமர்சனம் செய்திருந்தார். 

 

மேலும் திரைப் பிரபலங்களும் வருத்தமடைந்துள்ளனர். தெலுங்கு நடிகர் நானி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ஜெயிபீம் என்ற ஹேஷ்டேக் குறிப்பிட்டு இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டுள்ளார். 

 

அதோடு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், "ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல், அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா?" என அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

கடந்த ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது சூரரைப் போற்று (5), சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (3), மண்டேலா (2) உள்ளிட்ட படங்கள் என மொத்தம் தமிழ் படங்கள் 10 விருதுகளும், மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் (3), மாலிக் (1) போன்ற படங்கள் விருதுகளை வென்றது. 

 

அப்போதே  பல முறை தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், "தேசிய விருது குழுவில் இந்தி பட ரசிகர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று கூட தெரியவில்லை. தேசிய விருது இப்பொழுது மோசமான நகைச்சுவையாக மாறியிருக்கிறது" என விமர்சித்திருந்தார். தமிழில் பல திரைப் பிரபலங்கள் விருதுகளை விட மக்கள் வாழ்த்து தான் பெரியது எனப் பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.