79வது சுதந்திர தின விழா நேற்று(15.08.2025) நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் அரசு அதிகாரிகள் அவர்கள்து அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி மகிழந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பட்டியலின சமூகத்தை சார்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்களால், அவர்களது அலுவலகங்களில் ஏற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதனை ‘நந்தன்’ படத்தில் பேசியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம், பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் கொடி ஏற்றியுள்ளனர். இதனை நந்தன் படக்குழுவின் வெற்றியாக படக்குழுவினர் கருதுகின்றனர். இது தொடர்பாக படத்தின் நாயகன் சசிக்குமார், “79வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் சரவணன், “நந்தன் கோரிக்கை நடந்தேறியது… தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் பேசினார்கள். ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை அனைத்து பி.டி.ஓ.க்களும் உறுதி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் வேறு யாரும் கொடியேற்றக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை’ என அரசு எச்சரித்ததாக சொன்னார்கள். சில பஞ்சாயத்துகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட, எந்தக் காலத்திலும் நிகழாத மாற்றமாக 79-வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற நல்லோர் எல்லோருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு விடுதலைத் திருநாளில் ஆதித்தமிழ்குடி ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் எவ்வித தடையுமின்றி, தாங்களே கொடியேற்றியுள்ளனர் எனும் செய்தி பெருமகிழ்வைத் தருகிறது! எந்த ஆண்டும் இல்லாது இந்த ஆண்டு, ஆதித்தமிழ்க்குடி ஊராட்சிமன்றத் தலைவர்கள் கொடியேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவிட கடந்த ஆண்டு வெளிவந்த 'நந்தன்' எனும் மகத்தான கலைப்படைப்பு ஏற்படுத்திய தாக்கமே முதன்மைக் காரணமாகும்!
சமூக அக்கறையுடன் உருவாகும் ஒரு நல்லத் திரைப்படம் எந்த அளவிற்கு மண்ணிலும், மக்கள் மனங்களிலும் மட்டுமின்றி அரசு அதிகாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அன்புத்தம்பி இரா.சரவணன் எழுதி இயக்கிய 'நந்தன்' திரைப்படம் ஆகச்சிறந்தச் சான்றாகும். இயக்குநர் அன்புத்தம்பி இரா.சரவணன் உள்ளிட்ட நந்தன் திரைப்படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.