namitha about prajwal revanna

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நமீதா, தொடர்ந்து அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது.

திரைத்துறையை விட தற்போது அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். பி.ஜே.பி.யை ஆதரித்து தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை வாக்கு பதிவின்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களிலும் பி.ஜே.பிற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நமீதா. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் கர்நாடக ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை” என்றார். பின்பு பெண்கள் பாதிக்கப்பட்டதாக மீண்டும் அந்தக் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அது தப்பாக இருந்தால் கோர்ட் பார்த்துக்கும்” என்றார்.