1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நளினி. 1987ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு நடிக்காமல் இருந்த நளினி 2000ஆம் ஆண்டு ராமராஜனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக விவாகரத்து பெற்றார். 

அதன் பிறகு பழைய படி குணச்சித்திர மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியான ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியிலும் நடித்து வந்தார். அதே சமயம் சின்னதிரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வந்தார். இப்போது தமிழ் படங்களில் மட்டும் கவனல் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் நளினி திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் வழிப்பட்டார். அப்போது கோவில் வாசலில் மடிப்பிச்சை ஏந்தி நின்று கொண்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், “என்னுடைய இஷ்ட தெய்வம் தேவி கருமாரி அம்மன், என் கனவில் வந்து நீ எனக்கு என்ன பண்ண போறன்னு கேட்டாங்க. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல. அப்புறம் என்னால முடிஞ்சத மடிப் பிச்சை ஏந்தி அதை காணிக்கையா தரேன்னு சொன்னேன். அதனால இந்த மடிப்பிச்சை ஏந்தினேன்” என்றார்.