Advertisment

“30 வருசமாச்சு, இன்னும் குறைந்த பாடில்லை” - நக்கீரன் ஆசிரியர்

nakkheeran editor speech in karpu bhoomi audio launch

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளை தான் வெளியிட கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் கலந்து கொண்டு பேசுகையில், “இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். போகிறபோக்கில் ராமாயணம் கட்டுக்கதை என சொல்லிவிட்டார். இதையே இனி விடமாட்டார்கள். சீதை என சிங்கத்துக்கு பெயர் வைத்தாலே இப்போது அடிக்கிறார்கள். இந்த சூழலில் நடிகை கவுதமியை பற்றி பேசுகிறார். பாரத தேசமா பாலியல் தேசமா என்கிறார். இதையெல்லாம் கவனித்து கொண்டிருப்பார்கள். ஆனால் இது தான் எதார்த்தம். இதற்குள் தான் வாழ்கிறோம். அதில் ஜெயிக்கிறோம். அவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி நாங்கள் கொண்டு வந்தது தான். மணிப்பூர் சம்பவத்தை நாங்களும் பேசி இருக்கிறோம். இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூச முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி சீரிஸ் பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறு வினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன்.

Advertisment

இந்த பொள்ளாச்சி விஷயத்தில் மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். மற்ற வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள். சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அவர்கள் என்னிடம் கேட்டகேள்வி யாரைக் கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள். யாரைக் கேட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டேன். வெளியிட்டிருக்கவே கூடாது என்றார்கள். நான் அப்படி சட்டம் எதுவும் இருக்கிறதா என்றேன். சட்டம் இல்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன். பத்திரிக்கையில் போட்டதற்கே இந்த விசாரணை. ஆனால் நேச முரளி சினிமா எடுத்திருக்கிறார். சும்மா விடுவாங்களா.

இயக்குநர் நேசமுரளியின் கோபமும் வேகமும் புரிகிறது. எங்களுக்கும் அந்த கோபம் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் வேறுமாதிரி இருக்கிறது. உங்களை நம்பி தொழில்நுட்ப கலைஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இது போன்று படமெடுத்தால் 109 கட் பண்ணுவோம் என்பதற்கு நேசமுரளி உதாரணமாகிவிட்டார். சென்சார் போர்டை ஆட்கொண்டுவிட்டனர். அதை மீறித் தான் அவர் ஜெயித்தாக வேண்டும். அடுத்ததாக மணிப்பூர் விவகாரத்தை படமெடுக்க வேண்டும் என சொன்னார். மணிப்பூர் என்ற தலைப்பை எப்படி விடுவார்கள். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிற பாலியல் பிரச்சனை. ஆனால் எதுவுமே பண்ணவில்லை, என சொல்லி மறுபடியும் அந்த பூமியில் அது போன்ற சம்பவங்கள் நடக்கிறதாக சொல்கிறார்கள். இதை எப்படி சென்சார் அனுமதிக்கும் என நம்புகிறீர்கள்.

மணல்மேடு விஷயத்தை 1994லயே நான் அட்டைப்படமா எடுத்தேன். ஒரு பிள்ளைய வீடு தேடி வந்து சிதைச்சிட்டாங்க. பால்டாயில் குடிச்சி குடும்பமே இறந்துட்டாங்க. 30 வருசமாச்சு. இன்னும் இதுமாதிரி சம்பவம் குறைந்த பாடில்லை, கூடத் தான் செய்கிறது. இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதற்கான வழியை தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு நக்கீரனும் துணை நிற்கும்” என்றார்.

nakkheeran editor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe