லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முன்னோட்ட விழா, கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாகர்ஜூனா, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் நாகர்ஜூனா பல்வேறு விஷயங்களை பகிர்ந்திர்ந்தார். அவர் பேசியதாவது, “லோகேஷ் கதை சொல்ல ஆரம்பிச்சப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. ரஜினி சார் இந்தப் படத்துல நடிக்க சம்மதிச்சாரா எனக் கேட்டேன். ஏன்னா என் ரோல் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ மாதிரி இருந்துச்சு. லோகேஷும் வில்லனை ஹீரோவுக்கு இணையாக காட்டுபவர். 

சன் பிக்சர்ஸ் கொடுத்த மொத்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி மிச்சம் இருக்கும் போதே மொத்த படப்பிடிப்பையும் லோகேஷ் முடித்துவிட்டார். ஆனால் பட்ஜெட் 5 சதவீதம் அதிகமாகியும் படத்தை முடிக்காத இயக்குநர்கள் இங்கு இருக்கின்றனர். பாங்காங்கில் ஒரு கப்பலில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த முழு படப்பிடிப்புமே சவால் நிறைந்ததாக இருந்தது. பின்பு படப்பிடிப்பு முடிந்ததும் அதில் வேலை பார்த்த 350 நபர்களுக்கு ரஜினி பணம் கொடுத்து அவர்களின் குடும்பத்துக்கு எதாவது வாங்கிகொடுங்கள் என சொன்னார்” என்றார்.