1961ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு 1980 மற்றும் 90-களில் தெலுங்கில் மட்டும் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக உருமாறி இப்போது சீனியர் நடிகராக, அந்த டாப் ஹீரோ என்ற இமேஜை தக்க வைத்து வருபவர் நாகர்ஜூனா. இதுவரை தமிழில் ரட்சகன், பயணம், தோழா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து தனுஷ் நடிப்பில் கடந்த ஜூனில் வெளியான ‘குபேரா’ மற்றும் ரஜினி நடிப்பில் இம்மாதம் வெளியான கூலி படத்தில் நடித்திருந்தார். இதில் கூலி படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் நாகர்ஜூனாவின் நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இப்படம் நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து குறுகிய காலத்தில் இவ்வளவு வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது.
இந்த நிலையில் நாகர்ஜூனா, தனது 100வது படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். ஒரு பிரபல நிகழ்ச்சியில் இது குறித்த பேசிய அவர், “என்னுடைய 100வது படத்தை தமிழ் இயக்குநர் இரா.கார்த்திக் என்பவர் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ஒரு படம்(நித்தம் ஒரு வானம்) பண்ணியிருக்கிறார். 100வது படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகிறது. கூலி ரிலீஸ் ஆகிவிட்டதால் படப் பணிகளை தொடங்கவிருக்கிறோம். இந்த படத்தில் ஆக்ஷன், குடும்பம் மற்றும் ட்ராமா என அனைத்தும் இருக்கிறது. இதில் நான் தான் ஹீரோ. எனது அடுத்த பட ரிலீஸாக இந்த 100வது படம் இருக்கும்” என்றார்.
இரா.கார்த்திக் தமிழில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஜீவா உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். 2022ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அடுத்து நாகர்ஜூனாவின் 100வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே நாகர்ஜூனாவின் 100வது படத்தை கார்த்திக் இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.