1960களில் ஹீரோவாக அறிமுகமாகி பின்பு வில்லனாக மிரட்டி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெய் சங்கர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட இவர், 2000ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தேனாம்பேட்டை உள்ள கல்லூரி சாலையில் வாழ்ந்த நிலையில் அந்த சாலைக்கு ஜெய் சங்கர் சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஜெய் சங்கரின் மகனான விஜய் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.  

இதையடுத்து சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்த நிலையில் ஜெய்சங்கர் மகன் கோரிக்கைக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மக்களின் மேம்பாட்டிற்காக இரவு பகல் பாராது உழைத்திட்ட போதினிலும் கலைகளையும், கலைஞர்களையும் மறந்திடாமல் செயல்படும் பாராம்பரியத்தின் உதாரணமாய் மக்களை தன் நவீன அணுகுமுறையால், நடிப்பினை கையாண்ட தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என மக்களாலும், நண்பர்களாலும் புகழப்பட்ட ஜெய்சங்கரின் பெயர்கொண்டு நுங்கம்பாக்கத்திலுள்ள கல்லூரி சாலைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ என அமைத்திட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நெஞ்சம் நெகிழ்ந்து பாராட்டியும், வாழ்த்தியும் தன் நன்றியினை சமர்ப்பிக்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மறைந்த திரை பிரபலங்கள், விவேக், எஸ்.பி. பாலசுப்ரமணியன் ஆகியோரின் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பெயரில் சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.