/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/471_16.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார்.
சிவராஜ்குமார் குறித்து மேடையில் பேசிய கமல், என் மகனாகவும் ரசிகனாகவும் சிவ ராஜ்குமார் வந்திருப்பதாக சொன்னார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது நினைவுகளை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு இருக்கிறார். அதனால்தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார். அதாவது தமிழில் இருந்து தான் கன்னடம் மொழி உருவானது என்று கமல் சொன்னது கர்நாடகாவில் எதிர்ப்புகளை சம்பாதித்தது.
கன்னட மொழியை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, கன்னட சலுவளி வாட்டாள் பக்ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும், அவரது படங்கள் இங்கு ஓடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதோடு பெங்களூருவில் தக் லைஃப் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்காக வாழ்த்தி வைத்திருந்த ரசிகர்களின் பேனர்களையும் போஸ்டர்களையும் அவர்கள் கிழித்து, கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இவர்களை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என தனது கண்டனத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் பதிவு செய்திருந்தார். அதோடு கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமல் மன்னிபு கேட்க வில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்படும் என்று எச்சரிந்தார். இந்த பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் விளக்கமளித்திருந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என சூசகமாக தெரிவித்திருந்தார். மேலும், அரசியல்வாதிகள் மொழிகளை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் மொழியியல் அறிஞர்கள், வல்லுநர்கள் தான் இதற்கு சரியான பதில் சொல்வார்கள் என்றும் கூறியிருந்தார். அதோடு அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என தனது விளக்கத்தை கூறியிருந்தார். இருப்பினும் கர்நாடகாவில் எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கர்நாடக திரைப்பட சம்மேளனமும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைஃப் படத்தை தடை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய சிவ ராஜ்குமாரும், கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கமல் என்ன பேசினார் என்று அவருக்கு தெரியும், அதற்கு அவரே பதில் சொல்வார் என கூறினார். மேலும் கன்னட மொழியை ஆதரிப்பவர்கள் கன்னட சினிமாவில் என்ன செய்தார்கள் என கமலி எதிர்ப்பவர்கள் மீது கேள்விகளை அடுக்கியிருந்தார். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், மன்னிப்பு கேட்கமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து கமலுக்கு தொடர்ச்சியாக கர்நாடகாவில் இருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் இருக்கும் சூழலில் தமிழ் சினிலாவில் இருந்து யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கமல்ஹாசன் மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் வெகுஜன மக்களின் பேராதாரவை பெற்று அவர்களிடம் நிரந்தர இடம் பிடித்தவர். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும். அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. அவரது 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ராஜ பார்வை' திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று கிளாப்' அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த ராஜ்குமார், என்பதை குறிப்பிட விரும்புகிறோம். பின்னாளில், துரதிஷ்டவசமாக ராஜ்குமார் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் கமல் ஹாசன் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது. ராஜ்குமாரை தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் சிவராஜ்குமாரை தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல் ஹாசன்.
மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் மீது கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் 'தக் லைகப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமாரே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
அந்த நெகழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய கமல்ஹாசன், ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும் அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும், சிவராஜ்குமார் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும் உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக 'அவர் குடும்பத்தில் தமிழனான எனக்குப் பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார் என்னும் பொருள்பட பேசினார்.
சிவராஜ்குமார் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர். அதன் வெளிப்பாடாகவே 'கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்' மூலமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார் என்றும் கன்னட மொழியை சீர்தூக்கி பார்க்கின்ற கமலுக்கு ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)