நடிகர் சங்க வழக்கு; நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

nadigar sangam posting case update

தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முடிவுகள் சில வழக்கு காரணத்தால் இரண்டரை ஆண்டு கழித்து 2022ல் வெளியானது. அப்போது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நாசர் தலைமையிலான அணி பின்பு பதவி ஏற்று சங்கத்தை வழி நடத்தி வருகிறது. சங்கத்தின் விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சங்க கட்டிடப் பணிகள் முடியும் வரை அடுத்த மூன்றாண்டுகளுக்கு இப்போதுள்ள நிர்வாகிகளே தொடரலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தேர்தல் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்த எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. நடிகர் சங்க கட்டிட பணிகளை சுட்டிக்காட்டி பதவி காலத்தை நீட்டிக்க முடியாது. பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது” எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட்டு தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாகிகள் முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது பொறுப்பு வகிக்கும் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

actor karthi actor vishal nazar
இதையும் படியுங்கள்
Subscribe