தென்னிந்திய நடிகர் சங்க சட்டத்திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முடிவுகள் சில வழக்கு காரணத்தால் இரண்டரை ஆண்டு கழித்து 2022ல் வெளியானது. அப்போது வெற்றிபெற்ற நாசர் தலைமையிலான அணி சங்கத்தை வழி நடத்தி வரும் நிலையில் சங்க விதிப்படி அவர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சங்க கட்டிடப் பணிகள் முடியும் வரை அடுத்த மூன்றாண்டுகளுக்கு இப்போதுள்ள நிர்வாகிகளே தொடரலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தேர்தல் நடைபெறாமல் இப்போது இருக்கும் நிர்வாகிகளே சங்கத்தை வழி நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்த எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. நடிகர் சங்க கட்டிட பணிகளை சுட்டிக்காட்டி பதவி காலத்தை நீட்டிக்க முடியாது. பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட்டு தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாகிகள் முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நடிகர் சங்க தரப்பு வழக்கறிஞர், கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் தேர்தல் நடத்தும் பட்சத்தில் பணிகள் பாதிக்கப்படும் என தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி வரும் 15ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.