Naayadi movie competition

நாயாடி என்கிற வித்தியாசமான தலைப்பே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.இப்படத்தின் தலைப்பிற்கான விளக்கம் குறித்தும் படம் பற்றி சுவாரசியமான தகவல் குறித்தும் இயக்குநர் ஆதர்ஷ் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

இயக்குநர் ஆதர்ஷ் பேசியதாவது “புதுமுகமாக நடிக்கும்போது நமக்காகப் படம் பார்க்க வருபவர்கள் குறைவு என்பதால் கதைக்காக மக்கள் படம் பார்க்க வர வேண்டும் என்று முடிவு செய்தேன். நல்ல ஒரு கதையை உருவாக்கினோம். படமும் நன்றாக வந்துள்ளது. நாயாடி என்பது ஒரு இனக்குழு. பழங்குடியினரிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு இனமாக அது இருக்கிறது. இவர்கள் குறித்து நிறைய பேருக்குத் தெரியாது. சென்சார் போர்டு அதிகாரிகளுக்கே இவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இப்படியான ஒரு கதை என்பதால் மக்களுக்கு இதில் நிச்சயம் ஒரு ஆர்வம் இருக்கும். திரில்லர் வகையில் இந்தப் படத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.

Advertisment

இந்தப் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி 16 விருதுகளையும் வென்றுள்ளோம். இதுவே எங்களுடைய முதல் வெற்றி. நாயாடி மக்கள் மனிதர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அரசர்களுக்கு சேவகம் செய்யும் அடிமை வம்சங்கள் இருந்தன. அந்த சேவகம் செய்வதற்கு கூட நாயாடி மக்களை அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களாக இவர்கள் இருந்து வந்துள்ளனர். ஹாரர் வகையில் இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும்.

2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் போனது. மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு நான் சென்று மூன்று வருடங்கள் சம்பாதித்து படம் எடுத்தேன். இனி முழுமையாக சினிமாவில் இறங்கலாம் என்று முடிவு செய்து அங்கு எனக்கிருந்த மத்திய அரசு உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்தேன். என்னுடைய இரண்டாவது படம் இது. என்னுடைய படங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்புகிறேன். தொடர்ந்து சினிமாவில் இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எவ்வளவு அடி வாங்கினாலும் மீண்டும் எழ வேண்டும்.

Advertisment

இந்தப் படத்துக்காக நாங்கள் ஒரு போட்டியை நடத்துகிறோம். நாயாடி என்றால் என்ன என்பது குறித்து சமூகவலைத்தளத்தில் படத்தின் ஹேஷ்டாகுடன் எழுத வேண்டும். படம் பார்த்துவிட்டு உங்களுடைய சொந்த விமர்சனத்தை எழுதுங்கள். நாங்கள் 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து தங்கக் காசு, வெள்ளிக் காசு ஆகிய பரிசுகளை வழங்குகிறோம். அடுத்த படத்தில் நடிப்பதற்கும் பணிபுரிவதற்குமான வாய்ப்புகளும் இதன் மூலம் வழங்கப்படும். ஒருவேளை இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை நீங்கள் எப்படி எடுத்திருப்பீர்கள் என்று விளக்க வேண்டும். சிறந்த விமர்சனத்தை அளிப்பவர்களுக்கு அவர்களுடைய டிக்கெட் பணம் திரும்பத் தரப்படும்.